Wednesday, November 21, 2012

கசாப் தூக்கிலிடப்பட்டான் – உலகின் தீவிரவாதம் ஒழிந்ததாம்.




மும்பை தாக்குதல் - கசாபுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம், இந்திய மக்கள் மகிழ்ச்சியாம். 

புத்திசாலி மக்களே!

செலுத்தியவனை விடுத்து துளைத்த தோட்டாவை தூக்கிலேற்றியதால் யாருக்கேனும் பயனுண்டா?வில்லை விடுத்து அம்பின் கொம்பை உடைத்தால் அடுத்த அம்பு வராது என எண்ணும் நீ உண்மையில் அப்பாவிதானோ?

எரியும் நெருப்பில் லேசாக தண்ணியை தெளித்து விட்டு தீ அடங்கி விட்டதென சந்தோஷம் கொள்ளும் முட்டாள் மனிதனே அடியில் எரியும் விறகை எடுக்காமல் மேலே எரியும் நெருப்புக்கு தண்ணி தெளிப்பதால் என்ன பயன் என என்றாவது நீ யோசித்ததுண்டா?

ஒரு 19 வயது இளைனை மூளை சலவை செய்து அனுப்பியவனை பற்றி என்றாவது நீ யோசித்ததுண்டா? ஒரு கசாபை கொன்று விட்டோம் தீவிரவாதம் அழிந்தது என மகிழ்ச்சி அடைகிறாயே அவன் எதற்காக வந்தான். அவனை அனுப்பியவன் யார், எதற்காக நம் மீது இந்த கொலை வன்மம், எங்கு இது ஆரம்பமானது, எவன் தூண்டுகிறான்,நேரடியாக அல்லது மறைமுகமாக நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ நம்மால் இந்த சமூகத்தில் எத்தனை தீவிரவாதி உருவாகிறான் இதெல்லாம் தெரியுமா உனக்கு? 

அவனை அனுப்பிய மிருகம் இந்நேரம் அங்கே ஆயிரம் கசாபை மூளை சலவை செய்து கொண்டிருக்கும். அந்த மிருகமும் முன்பு ஒரு நாள் கசாபை போல மூளை சலவை செய்யப்பட்டதே என்பதையாவது நீ சிந்தித்திருக்கிறாயா?

இவனை எல்லாம் தூக்கில் தொங்கவிட்டால் தான் மற்ற தீவிரவாதிக்கெல்லாம் மரண பயம் வரும் என பயக்கணக்கு போடும் பைத்தியக்காரா, இவன் அங்கிருந்து கிளம்பி வரும் போதே அவனுக்கான மரணகுழியை அவனே தோண்டி வைத்துவிட்டுத்தான் வந்திருப்பான் என்பதை கூட சிந்திக்க முடியாதவனா நீ? இவனை போல இன்னும் எத்தனை எத்தனை இளைஞர்கள் உயிரை மலிவாக எண்ண யாரோ சிலரால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்பதை சிந்தித்திருக்கிறாயா?

 சிந்தித்திருந்தால் நீ எப்போதோ வேரைத் தேடி போயிருப்பாய். முதல் குண்டோ முதல் தோட்டாவோ அத்தோடு முடிவுக்கு வந்திருக்கும், நம் மரணக்கணக்கிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்றும் நீ கிளையைத்தான் கழித்துக்கொண்டிருக்கிறாய் வேர் விருட்சமாய் கொண்டிருக்கிறது என்பதை பற்றி சிறு கவலையும் உனக்கில்லை.

இதன் முடிவு ஒரு கசாபை தூக்கிலிடுவதால் முடிந்து விடுவதல்ல, கசாபை உருவாக்கும் மிருகத்தை அழிப்பதும் கூட அல்ல,அதன் காரணத்தை அழிப்பது.கடவுள், மதம்,இனம்,எல்லைக்கோடு இதில் அந்த காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.இதைத்தாண்டியும் இருக்கலாம். அதை தேடிப்பிடித்து அழிக்காதவரை அந்த பிரச்சினையை தீர்க்காதவரை மும்பை தாக்குதலில் மட்டுமல்ல வன்முறையால் உலகில் கொல்லப்படும் எந்த உயிரின் ஆன்மாவும் அமைதி கொள்ளாது.