Thursday, October 27, 2011

முயற்சி கொள், முடிவில் வெல்!!!

தொடுக்கப்பட்ட அம்பெல்லாம்
இலக்கை கொய்வதில்லை,
விடுக்கப்பட்ட கேள்விக்கெல்லாம்
விடை கிடைப்பதுமில்லை.
தொடுப்பதும் விடுப்பதும்
முடிவாக அல்ல
முயற்சியாக!

பூத்த பூ
பூமி சுற்றும் வரை
வாழ்வதில்லை.
பூ உதிர்ந்தால்
பூ சுமக்கும் செடி
மரிப்பதில்லை.
பூ பூப்பது
மடிவதற்காக அல்ல
மணப்பதற்காக!

கட்டும்போது
தாங்கும் மலரே
மாலையாகிறது.
வெட்டுப்பட
ஏங்கும் மரமே
வாசல் நிலையாகிறது.

வலியில்லா வாழ்க்கை
வளம் பெறுமா?
வலியில்லா வாழ்வுதான்
வலி பெறுமா?

தோல்வியின் விளிம்பில்தான்
வெற்றியின் வேர்கள்
தொடங்குகின்றன.
தோல்வியில் மிரண்டால்
வெற்றியின் விதைகள்
வேர் விடுவதில்லை.

வெட்ட வெட்ட நீள்வோம்...
தோல்வி தோற்கும் வரை
வெற்றி கிட்டும் வரை!!!

Wednesday, October 19, 2011

என் கவிதை வரும் நேரம்


எழுத நினைக்கும் போதெல்லாம்
நீ என்னிடம் வருவதில்லை,
கூட்ட நெரிசலிலும்
ஓட்ட அவசரத்திலும்
அவ்வப்போது வந்து செல்கிறாய்.
தலைப்பிட்டு தொடங்கினால்
தலைப்பின் எதிர்புறம் செல்கிறாய்.
முடித்து விட்டு தலைப்பை தேடினால்
முரண்பாடாய் நினைவில் வருகிறாய். 
முதல் வரியில் அழகாய்
முளைவிடுகிறாய்
முன்னோக்கி எதனால் நகர மறுக்கிறாய்?
எதிர்பாரா தருணங்களில்
நிமிடங்களில் நிரம்பி விடுகிறாய்,
காத்துக்கிடக்கையில்
சுலபத்தில் சிக்க மறுக்கிறாய்.
உள்ளிருப்புப் போராட்டமெல்லாம்
நடத்திப்பார்க்கிறாய்!

உணர்ச்சிக் கவிதை எழுத நினைத்தால்
புணர்ச்சி வரிகளாய் வந்து நிற்கிறாய்,
எழுச்சி வரிகள் தேடி திரிந்தால்
கிளர்ச்சி வரிகளாய் சிரித்து செல்கிறாய்.
நிலவுடமையில் நுழைந்து
பொதுவுடமையை கையிலெடுத்தால்
பெண் இடையில் கொண்டு போய் சேர்க்கிறாய்,

வார்த்தையாய் நீ வரும் போது
சேகரிக்க தாள் கிடைப்பதில்லை
தாள் கிடைக்கும் நேரம்
பேனா மை கிடைப்பதில்லை
எல்லாம் இருக்கும் நேரம்
எனோ நீ வருவதில்லை.
எப்படியோ உன் ஒத்துழையாமையாலும்
இன்று எனக்கோர் கவிதை கிடைத்தது!!!

Tuesday, October 18, 2011

உறவும் முறையும்

திருமண நிகழ்வொன்றில்
இவங்களை தெரியலையா? என்று
உறவுமுறையை
விளக்கத் தொடங்கினால் அம்மா.
ஒன்றுவிட்ட என்று தொடங்கி
அவங்களோட இவங்களோட
என்று இடையிடையே
தெரிந்த தெரியாத உறவுகளையும்
உள் நுழைத்து
ஒரு வழியாய் முடிப்பதற்குள்
முன்னூறு நொடிகளை
முழுங்கியிருந்தாள்.
கடைசிவரை சொல்லவே இல்லை
எப்படி அழைப்பது என்றோ
என்ன முறை என்றோ.
அத்தை என்றழைக்கலாமா?
அக்கா என்றழைக்கலாமா?
பெண் இருந்தால் என்ற பேராசை
மட்டும் குத்தாட்டம் போட்டது.
எதற்கும் இருக்கட்டும் என்று
நல்லாயிருக்கிங்களா என்று வெறுமனே
கேட்டு வைத்தேன்.

Thursday, October 6, 2011

நான் தொலைந்திருந்த அந்த நிமிடம்!

திரைச் சீலையில்
மறைந்து கொண்ட நான்,
தேடிக் கண்டுபிடித்த மழலை,
அந்த ஒரு நிமிடம்
நான்
தொலைந்துதான் போயிருந்தேன்!.

Sunday, October 2, 2011

குடைக்குள் நிலவு!

குடை விரிந்ததும்
வானம் மறைந்தது

நிலவு
மறையவில்லை.
குடைக்குள் நிலவு!