Monday, July 25, 2011

வலி போகும் வடு போகுமா?

வலி கொடுத்தோர் மறக்கக் கேட்டனர்
வலி மறந்தோம் வடு மறையவில்லையே
உயிர் போகும் வலி போகும்
வலி தந்த வடு போகுமா?

அன்னை இழந்தோம்
அண்ணன் இழந்தோம்
தந்தை இழந்தோம்
தங்கை இழந்தோம்

சுடுகாடே வீடாய்
தகனக் காடே விதியென்று
நாளும் ஒரு பிணம் சுமந்தோம்
எரித்த பிணம் எரிவதற்குள்
பிணம் சுமந்தோர் பிணமாயினரே

நேரம் நெருக்க
ஊரே சுடுகாடாக
சுடுகாடும் ஊராக
புதைக்கும் இடமின்றி
நாய்க்கும் நரிக்கும்
புழுவுக்கும் புல்லுக்கும்
எம்மையே திண்ணக்கொடுத்தோமே

விழி திறக்கும் முன்னே
சிதறிய உடலாய்
வீதிக்கு வந்ததே
எம் பிஞ்சு உடல்
பச்சிளங்குழந்தை

இருந்தோரை இழந்து
ஏதுமின்றி எவருமின்றி
பிச்சைப் பாத்திரம் ஏந்தினரே
எம் சிறார்கள்

உணரும் முன்பே
புணரப்பட்டு
உன் இச்சைக்கு
எச்சம் ஆயினரே
எம் இனச் சிறுமிகள்


முள்வேலி முகாமில்
சோற்றுக்கு கையேந்தியே
நடை பயின்றனரே
எம் குழந்தைகள்

நஞ்சுக் குப்பிக்கும்
உலகம் பிச்சையிட்ட -உன்
துப்பாக்கி ரவைக்கும்
தம்மையே தந்து
விடுதலைக்கு விதையாயினரே
எம் விடுதலைப் போராளிகள் !


செயற்கை மரணம் இல்லா
வீடில்லை
இயற்கை மரணமே
எம்மினத்திற்கில்லை என்றானதே

இத்தனையும் செய்துவிட்டு
மறக்கக் கேட்கிறாய்
வலி போகும்
வடு போகுமா?

Friday, July 22, 2011

முற்றுப் பெற்ற காமம், முடிவில் வேண்டிய வரம்!!!

எவரும் காணா இன்பம் கண்டேன்
உன்னை முழுதாய் ஆண்ட கர்வம் கொண்டேன்
முழுதாய் கலந்தாலும்
முற்றும் துறந்த கோலம் கண்டாலும்
காணாத உன் இளமை பருவ நிகழ்வை
வரமாய் வேண்டும் ஏக்கம் கொண்டேன்!

உன் மழலை சத்தம் - உன்
எச்சில் முத்தம் - நீ
முற்றத்தில் தவழ்ந்த நேரம் - உன்
தந்தையாய் நான்,
ஓர் நாள் வாழ்க்கை வேண்டும்!

தொட்டில் உலகிலும்
தோள்பட்டை சாய்விலும் - நீ
சிரித்த நேரம்
பூரித்த - உன்
தாயாய் நான்,
ஓர் நாள் வாழ்க்கை வேண்டும்!

மண்டியிட்டு நீ
மண்ணை உண்ட கணம்
சுட்டு விரல் நுழைத்து
மண் எடுத்த - உன்
அண்ணனாய் நான்,
ஓர் நாள் வாழ்க்கை வேண்டும்!

இடை அமர்ந்த தருணம்
விரல் பிடித்து நடந்த தருணம்
ஜடை பின்னல் சண்டையிட்ட தருணம்
பெண் ரகசியம் சுமந்த - உன்
சகோதரியாய் நான்,
ஓர் நாள் வாழ்க்கை வேண்டும்!

பள்ளி சென்ற காலம்- நீ
கிள்ளி தந்த பண்டம்,
அள்ளித் தின்ற உன் தோழி
அவளாய் நான்,
ஓர் நாள் வாழ்க்கை வேண்டும்!

காமம் கலைந்து
காதல் நிரம்பி
கண்ணில் வழிந்த நேரம்
வேண்டிய வரம்!!!

Saturday, July 16, 2011

சுமை தூக்கி!!!

வெள்ளியன்று நான்
பள்ளி சென்று திரும்புகையில்
வெறித்தக் கண் கொண்டு நீ
எரித்தபோது தோன்றவில்லை
தொலைவேன் என்று - தோன்றியது
யாரிவன் என்றே,


சிறுமியாய் இருந்த நான்
பெண்ணாய் பதவியேற்று சந்தித்த
முதல் அழுத்தப் பார்வை உனதே

வாய்மொழி தவிர்த்தோம்
உடல் மொழியில் நீயும்
கருவிழியால் நானும்
வார்த்தை பகிர்ந்தோம்

உன் உடல் மொழி - என்
உடலை மட்டும் குறிவைத்ததை அறியாமல்
என் விழிமொழியில்
காதல் மட்டும் பேசி வந்தேன்

வாய்மொழி தொடங்கியபோது
விழியும் உடலும் மொழி மறந்தன
அவை முடங்கி
இன்றுடன் நிலவு
இருமுறை
பெருத்து விட்டது

வார்த்தை வித்தை
வளைத்தது என்னை
புரிந்தும் வீழ்ந்தேன்

ஊர் உறங்கிய ஓர் நாள் இரவு
முத்திய மழையில் தத்திபோன தவளைகள்
போர்வை தேடிய தெரு நாய்
வெண்மையின் மறுபக்கம் எங்கும் சூழ்ந்திருக்க
நான் மட்டும்
வியர்வைக்கடலில் மூழ்கி கொண்டிருக்க
நீயோ நீந்திகொண்டிருந்தாய்

பரிமாறும் இடத்தில் நான்
பசியாறும் இடத்தில் நீ
அடங்கியது
உன்னுடன் சேர்ந்து
எனது பசியும்

களங்கமென்று நினைத்தோ
நிலவும் அன்று களவு போயிருந்தது

விடிந்ததும் நினைவில் வந்தது
நேற்றும் வெள்ளி என்று

கலாச்சாரக் காவலர்கள் தூற்றினார்கள்
கெடுத்தவனை மறந்து
கெட்டவளை மட்டும்

கூடிப்போன உன்னை
தேடி அலைகிறேன்
ஒற்றையாய் இருந்த நான்
ஒன்றை சுமந்தபடி

இரு நாள் விடுப்பை எண்ணி
மீண்டும் ஒரு வெள்ளியன்று
துள்ளிகுதித்து பள்ளியிலிருந்து
விடை பெரும் சிறுமிகள்!!!