Friday, August 5, 2011

மணமகன் விற்பனை

நானும் ஒரு பெண்தான்
என்னுள்ளும் மாற்றங்கள்
நிகழ்கின்றன,
என்னுள்ளும் கரு
கர்ப்பம் தரிக்கிறது!
நானும் பிரசவிக்கிறேன்
எழுத்துக்களை!
அவற்றை
குழந்தை போல பாதுகாக்கிறேன்,
கடைசியில் விற்றுவிடுகிறேன்,
கல்யாண சந்தையில்
நேற்று மகனை
விற்றது போல!!!

என் கவிதை நாயகி!!!

என் விரல் புரட்டிய
பக்கங்களும்,
இமையசையா வாசித்த
எழுத்துக்களும்
அவளைப் பற்றியே!

எந்த மையில்
எழுதினாலும்
அவள் கருப்பு சரித்திரமே - என்
எழுத்துக்களாய் பிரசவிக்கின்றன!

கடலை எழுதினாலும்,
திடலை எழுதினாலும்,
இயற்கையை எழுதினாலும்,
இம்சையை எழுதினாலும்
முடியும் இடம்
அவளை நோக்கியே!

என் பக்கங்கள் எல்லாம்
எனைக் கேட்டன
எங்களுக்கு வேறு
உடுப்பே இல்லையா? என்று.
உடை இழந்து
நிர்வாணமாகிப்போன அவள்
இழந்த கலை
மீட்கும் நாள்
உனக்கு விடுதலை என்றேன்.

எழிலாய் இருந்தவள்
இன்று இல்லாது போயிருந்தாள்
என் கவிதையின்
கருப்பொருளாய் இருந்தவள்
கடைசியில்
காணாமல் போயிருந்தாள்
அவள் ஈழத் தாய்!!!

Thursday, August 4, 2011

ஒட்டிய உறவு

வேண்டாம் என்று
விலகிப் போனவளை
வெறுக்காமல்
விட்டு விலகி நடந்தேன்
ஒட்டிக்கொண்டு வந்தது
அவள் தலையிலிருந்து
கொட்டிய முடியிலொன்று !!!

Wednesday, August 3, 2011

இங்கே புகை பிடிக்கக் கூடாது!!!

மழையில் அணையாமல்
சிகரெட்டை காப்பாற்றினேன்
என்னை அது
எரிப்பது புரியாமல்!

வலி(ர)தட்சணை

அடிமைகள் சந்தையில்
எனக்கான விலையை
யாரோ நிர்ணயம் செய்கின்றனர்!
அதில்
ஒரு காலத்தில்
இதே சந்தைக்கு
வந்தவளும் அடக்கம்.
இன்று பேரம் பேசுபவள்,
முன்னொரு நாள்
பேரம் பேசப்பட்டவளே!
பெண்மையின் வலி புரிந்தவள்
வாழ்வின் வழியடைப்பது ஏனோ?