Tuesday, September 27, 2011

எட்டு நாள் வாழ்க்கை !!!

சிரித்துக் கொண்டே பிறக்கிறேன்
சற்று நேரத்திலெல்லாம் நடக்கிறேன்.
அந்த நாள்
என் வலக்கை
இடப்பக்கமாக இருந்த ஞாபகம்!

நள்ளிரவு மழை
இரட்டை வானவில்
ஒற்றை நிறத்தில் !

சிரித்துக் கொண்டே செல்லும் சிற்பம்
முறைத்துக்கொண்டே மூச்சு விடும் சித்திரம்

தெளிந்த குட்டையில்
குழம்பிய மீன்கள்
மனிதர்களுக்கு வலை வீசுகின்றன !

ஆண்களில்லா தேசத்தின் வீதியில்
பெண்ணொருத்தி
குழந்தை தூக்கி என்னை கடக்கிறாள் !

நடந்து முடிக்கையில்
நனைந்தும் முடித்திருக்கிறேன்

வெள்ளை புரவி வேட்டைக்குச் செல்ல
நான் தேரிழுக்கிறேன். - அங்கே
புலியொன்று புல் மேய
மானொன்று அதன் மேல் பாய
அருகே
களிறொன்று கயிறோன்றால் தூக்கிலிடப்படுகிறது!

வேட்டை முடிந்து புரவி மன்னன்
கோட்டை திரும்புகிறான்

கோட்டையில்,
கருத்த கிழவி வெளுத்த உடையில்
தன் மகனை கொன்ற
புரவி மகனுக்கெதிறாய் மணியடிக்கிறாள்

தேர்க்காலில் இடப்பட்ட
புரவி மகனின் தண்டனையை நிறைவேற்ற
நானே தேரிழுக்கிறேன்

கூரான பூ ஒன்று
என்னை குத்திக் கிழிக்கிறது

தண்டித்ததன் தண்டனையாய்
வாரத்தின் எட்டாவது நாள்
செத்து விழுகிறேன்

நட்டநடு இரவில்
சட்டென்று கண் விழிக்கிறேன்
கலைந்து போனது
எட்டு நாள் வாழ்க்கை!

Tuesday, September 20, 2011

சிதறல்கள்

கூந்தல் !
சரிந்து விழும்
கற்றை கூந்தல்
அதை
ஒதுக்கி விடும்
ஒற்றை விரல்
அந்த ஒன்றாய்
நானிருக்கக் கூடாதா?

பூச்சூடல்!
ரோஜாவின் சிகரத்தில்
மல்லிகை!
நீ
பூச்சூடிய அழகு!

பொட்டு!
நிறம் மாறும் நிலா
உன்
நெற்றிப் பொட்டில்
குடியிருக்கும்
பொட்டு

இதழ்!
உன் செவ்விதழ் தழுவி
வருவதால்தான்
செம்மொழியாயிற்றோ
என் மொழி?

கண்கள் !
கண்ணசைவில் நீ
கதை நூறு பேசுவதாய்
நண்பன் சொன்னான்
எனக்கென்னவோ
நிற்கும் ரயிலை
கடக்கும் ரயில்
மோதுவதை போலத்தான்
இருக்கிறது
உன் மேலிமை கீழிமையுடன்
கூடும்போது!

நாசி !
ஆக்ஸிஜன் நுகர்ந்து
ஆக்ஸிஜன் வெளியிடும்
அதிசய நாசி உனதோ ?
உன் மூச்சுக் காற்றில்
வாழ்கிறதே என் உயிர்!

பருவப் பரு !
ஆணவத்துடன் அமர்ந்திருக்கும்
ஒற்றைப் பரு
உன் கன்னம் வேண்டுமானால்
தாங்கிக் கொள்ளலாம்
என்னால் முடியாது

கழுத்து !
காதலையும் காமத்தையும்
இணைக்கும் பாலம்தான்
உன் மெழுகு கழுத்தோ?

Thursday, September 8, 2011

ஏலம் போன விலைமகளின் ஈன ஓலம்!

நீண்ட நெடிய
என் வாழ்க்கையில்
நிறைய நடந்துவிட்டது.
வரம் வாங்கிய
வனப்பும் பொழிவும்
சாபக்கேடாய் போய்விட்டது!

கொடுத்துப் பெறுவதோ
எடுத்துக் கொடுப்பதோ
-
தாம்பத்திய காமம்!
கொடுத்த சுகத்திற்கு
வலியே கூலி
-
விலைமகள் சாபம்!

கண்டோர் எல்லாம் என்னை
விண்டு தின்றனர்
நாளும் ஒரு ஆளை
உடுத்துவதாய் பரிகாசம்
கொண்டனர்!
சுகமும் கண்டாள்
சொத்தும் கொண்டாள்
வார்த்தையில் கொண்றனர்!

உடலை வருத்தி உழைப்பு
உடலை கொடுத்து பிழைப்பு
யாருக்குத் தெரியும்
நான் இரண்டாமவள் என்று !?

செத்த உடலுக்கு
சித்திரவதை என்ன
சிங்காரம் என்ன,
மரத்துப் போனவளுக்கு
விலையாய்
பொன் வைத்தாள் என்ன
பொருள் வைத்தாள் என்ன,

நித்தம் தன்னை
மெத்தையாக்குகிறவள்
முள்ளில்தான் படுக்கிறாள்
என்பதை
யார்தான் அறிவார் !!!

Tuesday, September 6, 2011

இனியொரு உலகு செய்வோம்!!!

தனி உலகம் வேண்டும்!!!
தண்ணீர் அங்கே
பொதுவாய் வேண்டும்!
சாதிப் போரில்
சாதிகள் மட்டும்
சாகட்டும்!
மனிதம் ஒன்றே
மதம் என்றாகட்டும்!
பசித்தவன் உணவு
கைக்கெட்டும் தூரத்தில்
இருக்கட்டும்!
கொட்டும் மழையும்
கொளுத்தும் வெய்யிலும்
வேண்டுவோர் தலையில்
மட்டும் விழட்டும்!
துர் மரணங்கள்
தூர விலகட்டும்!
மூப்பொன்றே மூச்சடக்கும்
காரணி ஆகட்டும்!
உழைப்பவனுக்கும்
உழைத்துக் களைத்தவனுக்குமே
ஊர் சொந்தமாகட்டும்!
கண்ணீர் ஊர்வலக்
காரண ஆயுதங்கள்
அமைதி ஊர்வலம்
போகட்டும்!

கடைசியில்,
குருதியின் ஓட்டம்
மனிதன் உடலுக்குள்
மட்டும் இருக்கட்டும்!!!