Thursday, March 29, 2012

இப்படிக்கு உன் இரக்கமற்ற நினைவுகள்!!!


விடிந்தும் விடியாத காலை
கலைந்தும் கலையாத உறக்கம்
மறந்தும் மறையாத நினைவின் தடங்கள்

அன்றொரு நாள்
கொட்டிய மழையில்
ஒட்டியவாறு
ஒற்றை குடையில் இருவருமாய்!
நீரில் கால் பதித்து நடக்க
நிலவில் நடந்ததாய் ஞாபகம்!

அன்றொரு நாள்
கலைந்த படுக்கைக்குள்
கலையாத உறக்கத்தை
கலைத்துக்கொண்டு நுழைந்தது.
உன் விருப்பப்பாடல்
அன்றெல்லாம் உன் நினைவு
அனலாய் என்னுள்
கொதித்துக்கொண்டிருந்தது!

அன்றொரு நாள்
நாம் சென்ற பாதைகளில்
நான் மட்டும் தனியே.
நான் சென்ற பொழுது
நாம் பதித்த தடங்களை
ஒற்றையாய் தேடி அலைந்தேன்!

Tuesday, March 27, 2012

மதுக் கோப்பையும் மயக்கப் புன்னகையும்!!!


கிறக்கம் கொண்டும்
உறக்கம் இல்லை.
மதுக் கோப்பையும்
மயக்கப் புன்னகையும்
தருகிறது கிறக்கம்.
கீழ்காண்பவை பறிக்கிறதென் உறக்கம்.
இரக்கமில்லாத இதழ்,
உறக்கம் பறித்த விழி,
கரும் பனிப்புயல் கூந்தல்
பனிக்கட்டி பற்கள்
உடை தூங்கும் இடை
கொன்று புதைக்கும் கன்னக்குழி
ரேகை சுமக்கும் உள்ளங்கை
அதை இணைக்கும் முன்னங்கை
நிலத்தில் முளைத்த புற்களாய்
பரந்து கிடக்கும் ரோமங்கள்
அங்கங்கெளெல்லாம் தீக்கங்குகளாய்
எரித்து தொலைக்கிறது என்னை
ஏனோ வலியில்லை
சுகமுமில்லை
சுமை கூட இல்லை
இமை மூட மட்டும்
இதுவரை வழியில்லை....

Sunday, March 25, 2012

ஜனனமும் மரணமும்!


மரணத்தை நோக்கிய என் பயணம்
ஒரு ஜனனத்தின் புள்ளியில் துவங்கியது,
இடையில் இளைப்பாறிய சில ஆண்டுகள்
உலகின் வாழ்நாளில்
சில நொடிகளாய்
நொடிகளின் துகள்களாய் போனது.
ஒவ்வொரு நொடிக்கும் ஒரு அடி என
எடுத்து வைக்கிறேன்.

விட்டம் நோக்கி
எட்டி உதைத்துக்கொண்டிருந்த நான்
சில நொடிகளில்
காலூன்றி இடம் பெயர தொடங்கினேன்.
பொம்மைகளுடன் கழிந்த பொழுதுகள்
பால்யத்தோடு கலைந்துபோனது.

புத்தக மூட்டை பொதிமூட்டைகளாய் கனக்க
சில அடிகளில் பள்ளி வாழ்க்கை முடிக்கிறேன்
இளமை எனக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது.

கல்லூரி, கனவும் காதலுமாய்
கடைசி வரை நீளுமென நினைத்திருந்தேன்
கடமை கழுத்தை வளைக்க
அதுவும் பிரிந்தது பிரியாவிடையோடு.

வாலிபம் எனக்காக வாசலில் காத்திருந்தது,
வலிய வந்து வரவேற்றது
வலியை கொடுக்கத்தான் என்பதை
அறிந்திருக்கவில்லை அப்போது நான்.
மணவாழ்க்கை மகிழ்ச்சியை
அதன் பாரம் முண்டியடித்து முறியடித்தது.
மழலை சத்தத்தை ரசிக்கவும்
எச்சில் முத்தத்தை ருசிக்கவும்
இருக்கவில்லை நேரம்,
வாலிபம் கொடுத்த ரணம்
காரணம்.
மேலும் சில அடிகள்
வாலிபமும் விடை கொடுத்து வெளியேறியது.

முடிவில்,
முதுமை என்னை நெட்டித் தள்ளியது
மரணக் குழியில் மல்லாந்து விழுந்தேன்
முடிந்து போனது என் பயணம்.

Saturday, March 24, 2012

பட்டுப்புடவையில் நீ!!!


பட்டாம் பூச்சியின் உடலை
பட்டுப்புழுக்கள் போர்த்தின
பட்டுப்புடவையாய்!!!