Wednesday, November 30, 2011

பிடி சோறு கொள்கை!!!


ஏர் கொடுத்தவனுக்கு ஊரும்
ஏர் பிடித்தவனுக்கு கைப்பிடி சோறும்
எத்தனை நாளுக்கு!
உழைத்துத் தேய்பவன்
புழுதியிலும்
உட்கார்ந்து கொழுத்தவன்
கோடியிலும்
புரல்வதெப்படி?

ஆண்டையெல்லாம் அடுக்கு மாடியில்
அடிமையாய் நீ தெருக்கோடியில்.
நீ உடைத்த கல்லெல்லாம்
கடவுளாக
படைத்த நீ மட்டும்
கைகட்டி கையெட்டா தூரத்தில்.
நீ சுமந்த மண்ணெல்லாம்
மாளிகையாக,
நீ மட்டும் செம்மண் தரையிலும்
செந்தழல் புகையிலும்.
நீ விதைத்த விதையெல்லாம்
முதலாளி கழுத்து வரை உணவாக
உனக்கு மட்டும்
கால் வயிறும் அரை வயிறும்.

ஒட்டிய கன்னத்திலும்
ஒடுங்கிய வயிற்றிலும்
தெரியாதது
முப்பத்துரெண்டு ரூபாயில் தெரிகிறது
-உன் வறுமைக்கோட்டின் அளவுகோள்!

ஆண்டையாய் இருந்தவன் ஆள்பவனாய்
பண்ணையாராய் இருந்தவன் தொழிலதிபனாய்
கால ஓட்டத்தில் பெயர் மாறி
உரு மாறாதிருக்க
நீ மட்டும் அன்றும் இன்றும்
கூழை கும்பிடு போடும்
கூலிக்காரனாய்
ஏவலுக்குக் காத்திருக்கும்
ஏமாளியாய்!

விதைந்த நெல் தொலைந்து போகட்டும்
விதை நெல் என்றும்
உன் வசமே இருக்கட்டும்.
உழைப்பவன் வசமே
உருவாக்கமும் இருந்தால்
உழைப்பவன் கையே ஓங்கியிருக்கும்.

கையளவு நீரை
தீக்குச்சி நெருப்பு பொசுக்காதுதான்,
புரிந்து கொள் தோழா
எரிமலை வெடித்தால்
சமயத்தில் சமுத்திரமும்
ஆவியாய் போகலாம்,
தீக்குச்சி போதும் 
தீக்கூட்டம் பற்றும்.
பற்ற வைப்போர் வருவாரென காத்திருக்காதே
பற்ற வைப்போம் மற்றவர் வருவாரென
துணிந்து நில்
எரிமலையும் வெடிக்கும்,
பொதுவுடமையும் பிறக்கும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



No comments:

Post a Comment