Monday, October 29, 2012

நாம் தொலைத்த தமிழ்





               உலகிலேயே தன் வரலாறு தெரியாத அல்லது தெரிந்து கொள்ள முயலாத ஒரு இனம் உண்டென்றால் அது தமிழினமாக மட்டுமே இருக்கும். நாம் சாதியாய், மதமாய்,கட்சியாய் பிரிந்து கிடந்தாலும் நம்மை தமிழன் என்ற தேசிய இனமாய் நூலிழையில் இன்னும் இணைத்துக்கொண்டிருப்பது மரணப்படுக்கையில் மிச்சமிருக்கும் இன்றைய கலப்புத் தமிழ்தான்.

             என் சாதிப் பெண்ணை எப்படி நீ பார்க்கலாம்,என் மதத்துப் பெண்ணை எப்படி நீ நோக்கலாம் என்றெல்லாம் அரிவாள் தூக்கும் இந்த தன்மானத் தமிழன் மொழியில் மட்டும் வேற்றான் மொழி கலவி புரிவதை கர்வமாய் பார்க்கிறான்.எம்மொழியும் என் மொழியுடன் புணரலாம் என புது விதி படைக்கிறான். கேட்டால் உன் தமிழ் எனக்கென்ன தந்தது என எதிர் கேள்வி கேட்கிறான் அது நம் தமிழ் என உணராமல்.


             ஒரு மொழியின் சிதைவு அந்த மொழியின் அழிவு.ஒரு மொழியின் அழிவு அந்த மொழி பேசும் இனத்தின் அழிவு. ஆண்டுகள் பல கடந்து விட்டது நாம் நம் மொழியை சிதைத்து. சிதைந்த மொழி இப்பொது அழிவை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பதிவின் நோக்கம் யாரையும் சாடுவதற்கோ,எவர் மீதும் பழி போடுவதற்கோ அல்ல நாம் எல்லோருமே இதற்கு காரணகர்த்தாக்கள். நோக்கம் மிகச் சிறியது தொலைத்து விட்ட, வழக்கில் இருந்து விரட்டப்பட்ட,மொழி கலப்பால் புறந்தள்ளி புறக்கணிக்கப்பட்ட நம் தமிழை,கிடைத்தவரை அகழ்ந்து,தேடிப்பிடித்து என் வலைப்பக்கம் என்ற இந்த பெட்டகத்தில் சேகரித்து வைப்பது. அருங்காட்சியகத்தில் அடைக்கப்பட்ட நம் பழந்தமிழர் வீரக் கருவிகளை காணுவது போல, இங்கு ஒரு காலத்தில் இந்த உயிரினம் வாழ்ந்தது என்று அகழ்வாராய எலும்புகளின் மிச்சம் உதவுவதை போல இங்கே தமிழ் என்கிற தொன்மை மொழி வாழ்ந்தது என்பதன் அடையாளமாய் என் வலைதளமும் நாம் தொலைத்த தமிழ் என்கிற இந்த பதிவும்.


தமிழ் எண்கள் :

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எண்களுக்கான குறியீடை படைத்தவர்கள் நம் மூத்தோர்.எங்கோ இருக்கின்ற ரோம எண் குறியீட்டை படித்து அறிந்த நாம் தாய்த்தமிழில் எண் குறியீடு உண்டு என்ற விடயம் கூட தெரியாதிருப்பது என்பது வெட்கக்கேடு.

  ௧ = 1

  ௨ = 2

  ௩ = 3

  ௪ = 4

  ௫ = 5

  ௬ = 6

  ௭ = 7

  ௮ = 8

  ௯ = 9

  ௰ = 10

  ௱ = 100

  ௨௱ = 200

  ௩௱ = 300

  ௱௫௰௬ = 156

  ௲ = 1000

  ௲௧ = 1001

  ௲௪௰ = 1040

  ௮௲ = 8000

  ௰௲ = 10,000

  ௭௰௲ = 70,000

  ௯௰௲ = 90,000

  ௱௲ = 100,000 (லட்சம்)

  ௮௱௲ = 800,000

  ௰௱௲ = 1,000,000 (10 லட்சம்)

  ௯௰௱௲ = 9,000,000

  ௱௱௲ = 10,000,000 (கோடி)

  ௰௱௱௲ = 100,000,000 (10 கோடி)

  ௱௱௱௲ = 1,000,000,000 (100 கோடி)

  ௲௱௱௲ = 10,000,000,000 (1000 கோடி)

  ௰௲௱௱௲ = 100,000,000,000 (பத்தாயிரங்கோடி)

  ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (லட்சம் கோடி)

  ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (கோடானு கோடி)

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



2 comments:

  1. புஷ்பா, உன் தமிழ் உணர்விற்கும் முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள்.. எனினும் சில நெருடல்கள்..

    தமிழ் ஒரு மொழி மட்டும்.. தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் என்றால், நாம் ஆங்கிலம் பேசுவதால் நாம் எல்லாம் ஆங்கிலயர்களா? தமிழ் இனம் என்ற தொடர் நமக்கு தவறாக கற்பிக்கபட்டிருக்கிறது.. உண்மையில் நமது மூதாதையர்கள் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது தான் அறிவியல்... நேற்று ஆப்ரிக்காவில் இருந்தோம் இன்று ஆசியாவில் இருக்கிறோம்.. நாளை?

    எப்படி யோசித்தாலும் நாம் ஒரு மனித இனம் என்பதை தாண்டி தமிழர், கன்னடர், தெலுங்கர் ஆங்கிலையர் என்று பிரித்து பார்ப்பது ஒரு அபத்தம்.

    தமிழ் உணர்வோடு பேசும் நாம் குறைந்த பட்சம் நமது பெயரில் உள்ள வடமொழி எழுத்தை மாற்ற முடியுமா? நமது அடையாளமே தமிழ் அல்ல என்பதை உணரவேண்டும், நண்பா!!

    ReplyDelete
  2. இன்று சாதியைக் கொண்டு, மதத்தைக் கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்களை விட தன் தாய் மொழியைக் கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் ஒரு படி மேல் என்பது என் கருத்து.மனித இனம் என்ற ஒற்றுமையை தாண்டி உயிரினம் என்று சமத்துவம் பேசுவதில் எனக்கு மிகுந்த உடன்பாடுண்டு. ஆயினும் நாம் வாழ்ந்த வாழ்க்கையை, வாழ்ந்த வீட்டை, உலவிய இடங்களை நமது தனித்தன்மையை அழியாமல் பாதுகாப்பது அவரவர் கடமை. நமது பேச்சில்,பெயரில் கலந்து விட்ட மொழி கலப்புக்கு அனைவருமே காரணம் நான் உட்பட. வடமொழியில் ஆங்கிலக்கலப்பிருக்கலாம் அதை விடுத்து அன்னிய மொழி கலப்பிற்கு அங்கு வாய்ப்பில்லை, நம் மொழியில்தான் ஆங்கிலம் முதல் அனைத்து மொழியும் கலந்து சிரிக்கிறது. நான் எந்த மொழிக்கும் எதிரியில்லை, எம் மொழி கற்பதற்கும் நான் எதிரி இல்லை, நான் கூட தமிழ் தாண்டி சில மொழிகளை அறிந்தவன், ஆயினும் அந்தந்த மொழியை அதன் அழகுடன் அதன் சிறப்புடன் அதன் தனித்துவம் குன்றாமல் பேச வேண்டும் என விரும்புகிறேன் என் தமிழ் மொழியை போல.

    உலகின் முதல் மனிதன் ஆப்ரிக்கன் என்றால் அவனுக்கு என் வணக்கம்.ஆனால் மனிதன் தோன்றிய அன்றே மொழி தோன்றவில்லை, உடல் மொழி மட்டுமே ஆதி கால மொழியாக இருந்தது. நாகரீகம்,கலாச்சாரம், வாழும் முறை இவற்றைக்கொண்டு ஒவ்வொரு இனமும் அடையாளப்படுத்தப்பட்ட போது உடல் மொழி ஒலி மொழியாக மாறியது. ஆக தமிழ் மொழி என்ற தொன்மை மொழி உருவானதும் இவ்வழியே அன்றி வேறு இனத்திலிருந்து திரிந்தது அல்ல.

    ReplyDelete