Thursday, March 1, 2012

பொறாமை!!!


பூவை பறித்து
தலையில் சூடினாய்.
பட்டுப் போன
பக்கத்து செடியும்
பூக்கத் தொடங்கியது
பொறாமையில்!!!

புன்னகை!!!


உன் புன்னகையை
இரவல் கேட்கிறது வெண்ணிலவு
நீ மறுத்து விட்டதால்தான்
எதிர்ப்பை காட்ட
மறைந்து விடுகிறதோ
மாதம் ஒருமுறை!

Saturday, February 25, 2012

நெற்றி சுருக்கம்!!!


நீ நெற்றி சுருக்கி
யோசித்துக் கொண்டிருக்கிறாய்,
உன் யோசனை தோல்வியடைய
நான் வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
உன் நெற்றி சுருக்கத்தை ரசித்தபடி!!

Tuesday, February 21, 2012

கூடல்

நிலவின் மறைவை கணக்கிட்டு
தேனீக்கள் புறப்பட்டன தேனெடுக்க
ஒன்றைக் கொடுத்து ஒன்றை பெறும்
பண்டை கால பண்ட மாற்று முறையாய்
தேனை கொடுத்து
மகரந்தம் சுமக்க செய்தன சில மலர்கள்.
தேனுக்கு விலையாய்
தேனை உறிஞ்சியவாறே
மகரந்தத்தை மலர்களினூடே
செலுத்திச் சென்றன தேனீக்கள்.
மகரந்த சேர்க்கைக்கு மறுநாள்
புதிதாய் கூடிய மலர்களெல்லாம்
தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டன
வண்டுடன் கூடியதாய்!
மலருக்கெப்படி தெரியும்
வண்டல்ல, அது சுமந்த மகரந்தம்தான்
தன்னுடன் கூடியதென்று.
ஒருபுறமோ குழப்பம்
மறுபுறமோ பெரும் கலகம்
புதிதாய் தேனெடுத்த தேனீக்களெல்லாம்
சண்டையிட்டுக்கொண்டன
தான்தான் மலர்களின் வாரிசு பெருக்கத்திற்கு
காரணமென்று!
கால ஓட்ட நிகழ்வுக்கேற்ப
மீண்டும் ஒரு மகரந்தசேர்க்கைக்காக
மகரந்தத்தை எதிர்பார்த்து மலர்கள்
காத்திருக்க
தேனீக்களெல்லாம் புறப்பட்டன
தேன் வேட்டைக்கு!

Tuesday, December 27, 2011

காலடித் தடம்

கண்ணும் கருத்துமாய் 
காத்து வருகிறேன் 
உன் காலடித் தடத்தை கூட!!!

Wednesday, November 30, 2011

பிடி சோறு கொள்கை!!!


ஏர் கொடுத்தவனுக்கு ஊரும்
ஏர் பிடித்தவனுக்கு கைப்பிடி சோறும்
எத்தனை நாளுக்கு!
உழைத்துத் தேய்பவன்
புழுதியிலும்
உட்கார்ந்து கொழுத்தவன்
கோடியிலும்
புரல்வதெப்படி?

ஆண்டையெல்லாம் அடுக்கு மாடியில்
அடிமையாய் நீ தெருக்கோடியில்.
நீ உடைத்த கல்லெல்லாம்
கடவுளாக
படைத்த நீ மட்டும்
கைகட்டி கையெட்டா தூரத்தில்.
நீ சுமந்த மண்ணெல்லாம்
மாளிகையாக,
நீ மட்டும் செம்மண் தரையிலும்
செந்தழல் புகையிலும்.
நீ விதைத்த விதையெல்லாம்
முதலாளி கழுத்து வரை உணவாக
உனக்கு மட்டும்
கால் வயிறும் அரை வயிறும்.

ஒட்டிய கன்னத்திலும்
ஒடுங்கிய வயிற்றிலும்
தெரியாதது
முப்பத்துரெண்டு ரூபாயில் தெரிகிறது
-உன் வறுமைக்கோட்டின் அளவுகோள்!

ஆண்டையாய் இருந்தவன் ஆள்பவனாய்
பண்ணையாராய் இருந்தவன் தொழிலதிபனாய்
கால ஓட்டத்தில் பெயர் மாறி
உரு மாறாதிருக்க
நீ மட்டும் அன்றும் இன்றும்
கூழை கும்பிடு போடும்
கூலிக்காரனாய்
ஏவலுக்குக் காத்திருக்கும்
ஏமாளியாய்!

விதைந்த நெல் தொலைந்து போகட்டும்
விதை நெல் என்றும்
உன் வசமே இருக்கட்டும்.
உழைப்பவன் வசமே
உருவாக்கமும் இருந்தால்
உழைப்பவன் கையே ஓங்கியிருக்கும்.

கையளவு நீரை
தீக்குச்சி நெருப்பு பொசுக்காதுதான்,
புரிந்து கொள் தோழா
எரிமலை வெடித்தால்
சமயத்தில் சமுத்திரமும்
ஆவியாய் போகலாம்,
தீக்குச்சி போதும் 
தீக்கூட்டம் பற்றும்.
பற்ற வைப்போர் வருவாரென காத்திருக்காதே
பற்ற வைப்போம் மற்றவர் வருவாரென
துணிந்து நில்
எரிமலையும் வெடிக்கும்,
பொதுவுடமையும் பிறக்கும்.

Thursday, November 3, 2011

நீர்த்துளி!!!


கைநீர் அள்ளி முகம் கழுவினேன்,
முகந்துடைத்தேன்,
கைத்துடைத்தேன்.
ஒளிந்து கொண்டன சில துளிகள்
என் கைரேகை இடுக்கில்!!!