Monday, July 25, 2011

வலி போகும் வடு போகுமா?

வலி கொடுத்தோர் மறக்கக் கேட்டனர்
வலி மறந்தோம் வடு மறையவில்லையே
உயிர் போகும் வலி போகும்
வலி தந்த வடு போகுமா?

அன்னை இழந்தோம்
அண்ணன் இழந்தோம்
தந்தை இழந்தோம்
தங்கை இழந்தோம்

சுடுகாடே வீடாய்
தகனக் காடே விதியென்று
நாளும் ஒரு பிணம் சுமந்தோம்
எரித்த பிணம் எரிவதற்குள்
பிணம் சுமந்தோர் பிணமாயினரே

நேரம் நெருக்க
ஊரே சுடுகாடாக
சுடுகாடும் ஊராக
புதைக்கும் இடமின்றி
நாய்க்கும் நரிக்கும்
புழுவுக்கும் புல்லுக்கும்
எம்மையே திண்ணக்கொடுத்தோமே

விழி திறக்கும் முன்னே
சிதறிய உடலாய்
வீதிக்கு வந்ததே
எம் பிஞ்சு உடல்
பச்சிளங்குழந்தை

இருந்தோரை இழந்து
ஏதுமின்றி எவருமின்றி
பிச்சைப் பாத்திரம் ஏந்தினரே
எம் சிறார்கள்

உணரும் முன்பே
புணரப்பட்டு
உன் இச்சைக்கு
எச்சம் ஆயினரே
எம் இனச் சிறுமிகள்


முள்வேலி முகாமில்
சோற்றுக்கு கையேந்தியே
நடை பயின்றனரே
எம் குழந்தைகள்

நஞ்சுக் குப்பிக்கும்
உலகம் பிச்சையிட்ட -உன்
துப்பாக்கி ரவைக்கும்
தம்மையே தந்து
விடுதலைக்கு விதையாயினரே
எம் விடுதலைப் போராளிகள் !


செயற்கை மரணம் இல்லா
வீடில்லை
இயற்கை மரணமே
எம்மினத்திற்கில்லை என்றானதே

இத்தனையும் செய்துவிட்டு
மறக்கக் கேட்கிறாய்
வலி போகும்
வடு போகுமா?

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



No comments:

Post a Comment