Saturday, July 16, 2011

சுமை தூக்கி!!!

வெள்ளியன்று நான்
பள்ளி சென்று திரும்புகையில்
வெறித்தக் கண் கொண்டு நீ
எரித்தபோது தோன்றவில்லை
தொலைவேன் என்று - தோன்றியது
யாரிவன் என்றே,


சிறுமியாய் இருந்த நான்
பெண்ணாய் பதவியேற்று சந்தித்த
முதல் அழுத்தப் பார்வை உனதே

வாய்மொழி தவிர்த்தோம்
உடல் மொழியில் நீயும்
கருவிழியால் நானும்
வார்த்தை பகிர்ந்தோம்

உன் உடல் மொழி - என்
உடலை மட்டும் குறிவைத்ததை அறியாமல்
என் விழிமொழியில்
காதல் மட்டும் பேசி வந்தேன்

வாய்மொழி தொடங்கியபோது
விழியும் உடலும் மொழி மறந்தன
அவை முடங்கி
இன்றுடன் நிலவு
இருமுறை
பெருத்து விட்டது

வார்த்தை வித்தை
வளைத்தது என்னை
புரிந்தும் வீழ்ந்தேன்

ஊர் உறங்கிய ஓர் நாள் இரவு
முத்திய மழையில் தத்திபோன தவளைகள்
போர்வை தேடிய தெரு நாய்
வெண்மையின் மறுபக்கம் எங்கும் சூழ்ந்திருக்க
நான் மட்டும்
வியர்வைக்கடலில் மூழ்கி கொண்டிருக்க
நீயோ நீந்திகொண்டிருந்தாய்

பரிமாறும் இடத்தில் நான்
பசியாறும் இடத்தில் நீ
அடங்கியது
உன்னுடன் சேர்ந்து
எனது பசியும்

களங்கமென்று நினைத்தோ
நிலவும் அன்று களவு போயிருந்தது

விடிந்ததும் நினைவில் வந்தது
நேற்றும் வெள்ளி என்று

கலாச்சாரக் காவலர்கள் தூற்றினார்கள்
கெடுத்தவனை மறந்து
கெட்டவளை மட்டும்

கூடிப்போன உன்னை
தேடி அலைகிறேன்
ஒற்றையாய் இருந்த நான்
ஒன்றை சுமந்தபடி

இரு நாள் விடுப்பை எண்ணி
மீண்டும் ஒரு வெள்ளியன்று
துள்ளிகுதித்து பள்ளியிலிருந்து
விடை பெரும் சிறுமிகள்!!!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



No comments:

Post a Comment