Tuesday, September 27, 2011

எட்டு நாள் வாழ்க்கை !!!

சிரித்துக் கொண்டே பிறக்கிறேன்
சற்று நேரத்திலெல்லாம் நடக்கிறேன்.
அந்த நாள்
என் வலக்கை
இடப்பக்கமாக இருந்த ஞாபகம்!

நள்ளிரவு மழை
இரட்டை வானவில்
ஒற்றை நிறத்தில் !

சிரித்துக் கொண்டே செல்லும் சிற்பம்
முறைத்துக்கொண்டே மூச்சு விடும் சித்திரம்

தெளிந்த குட்டையில்
குழம்பிய மீன்கள்
மனிதர்களுக்கு வலை வீசுகின்றன !

ஆண்களில்லா தேசத்தின் வீதியில்
பெண்ணொருத்தி
குழந்தை தூக்கி என்னை கடக்கிறாள் !

நடந்து முடிக்கையில்
நனைந்தும் முடித்திருக்கிறேன்

வெள்ளை புரவி வேட்டைக்குச் செல்ல
நான் தேரிழுக்கிறேன். - அங்கே
புலியொன்று புல் மேய
மானொன்று அதன் மேல் பாய
அருகே
களிறொன்று கயிறோன்றால் தூக்கிலிடப்படுகிறது!

வேட்டை முடிந்து புரவி மன்னன்
கோட்டை திரும்புகிறான்

கோட்டையில்,
கருத்த கிழவி வெளுத்த உடையில்
தன் மகனை கொன்ற
புரவி மகனுக்கெதிறாய் மணியடிக்கிறாள்

தேர்க்காலில் இடப்பட்ட
புரவி மகனின் தண்டனையை நிறைவேற்ற
நானே தேரிழுக்கிறேன்

கூரான பூ ஒன்று
என்னை குத்திக் கிழிக்கிறது

தண்டித்ததன் தண்டனையாய்
வாரத்தின் எட்டாவது நாள்
செத்து விழுகிறேன்

நட்டநடு இரவில்
சட்டென்று கண் விழிக்கிறேன்
கலைந்து போனது
எட்டு நாள் வாழ்க்கை!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



No comments:

Post a Comment