Sunday, March 25, 2012

ஜனனமும் மரணமும்!


மரணத்தை நோக்கிய என் பயணம்
ஒரு ஜனனத்தின் புள்ளியில் துவங்கியது,
இடையில் இளைப்பாறிய சில ஆண்டுகள்
உலகின் வாழ்நாளில்
சில நொடிகளாய்
நொடிகளின் துகள்களாய் போனது.
ஒவ்வொரு நொடிக்கும் ஒரு அடி என
எடுத்து வைக்கிறேன்.

விட்டம் நோக்கி
எட்டி உதைத்துக்கொண்டிருந்த நான்
சில நொடிகளில்
காலூன்றி இடம் பெயர தொடங்கினேன்.
பொம்மைகளுடன் கழிந்த பொழுதுகள்
பால்யத்தோடு கலைந்துபோனது.

புத்தக மூட்டை பொதிமூட்டைகளாய் கனக்க
சில அடிகளில் பள்ளி வாழ்க்கை முடிக்கிறேன்
இளமை எனக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது.

கல்லூரி, கனவும் காதலுமாய்
கடைசி வரை நீளுமென நினைத்திருந்தேன்
கடமை கழுத்தை வளைக்க
அதுவும் பிரிந்தது பிரியாவிடையோடு.

வாலிபம் எனக்காக வாசலில் காத்திருந்தது,
வலிய வந்து வரவேற்றது
வலியை கொடுக்கத்தான் என்பதை
அறிந்திருக்கவில்லை அப்போது நான்.
மணவாழ்க்கை மகிழ்ச்சியை
அதன் பாரம் முண்டியடித்து முறியடித்தது.
மழலை சத்தத்தை ரசிக்கவும்
எச்சில் முத்தத்தை ருசிக்கவும்
இருக்கவில்லை நேரம்,
வாலிபம் கொடுத்த ரணம்
காரணம்.
மேலும் சில அடிகள்
வாலிபமும் விடை கொடுத்து வெளியேறியது.

முடிவில்,
முதுமை என்னை நெட்டித் தள்ளியது
மரணக் குழியில் மல்லாந்து விழுந்தேன்
முடிந்து போனது என் பயணம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



No comments:

Post a Comment